வீரப்பனை வீழ்த்திய அதிரடி படையினருக்கு இரட்டை பதவி உயர்வு வழங்கிய அரசாணை ரத்து!!

சந்தன கடத்தல் வீரப்பனை வீழ்த்திய அதிரடி படையினருக்கு இரட்டை பதவி உயர்வு வழங்கிய அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சந்தன கடத்தல் வீரப்பன் 2004ஆம் ஆண்டு அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது அதிரடிப் படையில் இருந்த 752 பேருக்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் இரட்டை பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தது. அதன்பின்னரும் அந்த 752 பேருக்கும் பணி மூப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதனால் அதிரடிப் படையில் இடம்பெறாத பிற அதிகாரிகள் பாதிக்கப்பட்டதால், 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அவர்களுக்கு பணி மூப்பு வழங்கப்பட்டு மற்றொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதற்கு எதிராக அதிரடிப் படையினர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், 2013ஆம் ஆண்டு, அதிரடி படையினருக்கு இரண்டாவது பணி மூப்பு வழங்கும் வகையில், காவல்துறை சர்வீஸ் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதற்காக ஒரு புது அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையையும் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 2013ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை தற்போது ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே சட்ட முன்னுதாரணங்கள் இருக்கும்போது, அதற்குமுரணாக இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இரட்டை பதவி உயர்வு என்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது என்றும், ஒருமுறை பதவி உயர்வு வழங்கியதே சரி என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.