ஈரானை தொடர்ந்து, இலங்கையும் கைவிடுகிறதா இந்தியாவை?

இந்தியாவுடனான சபஹார் ரயில்வே திட்டத்தை ஈரான் நாடு ரத்து செய்துள்ள நிலையில், இலங்கையும் கொழும்பு துறைமுகத் திட்டத்தை மறுபரீசிலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் முக்கிய துறைமுகமான சபஹாரில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லை வரை இந்தியா சார்பாக ரயில்வே பாதை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் ஆகியோர் இடையே கடந்த 2016ம் ஆண்டு இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால், நான்கு ஆண்டுகள் ஆகியும் இதற்கான நிதி உதவிகளை இந்தியா வழங்காமல் இருந்ததாக ஈரான் தெரிவித்திருந்தது. இந்தியாவின் உதவியின்றி அனைத்து பணிகளையும் மேற்கொள்ள போவதாக தெரிவித்த ஈரான், இந்தியாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. மேலும், சீனாவுடன் 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஒப்பந்தங்களை ஈரான் கையெழுத்திட்டுள்ளது.
இதனிடையே, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவும், இந்தியாவுடனான கொழும்பு துறைமுகத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து வருகிறார். இந்தத் திட்டத்தை இந்தியாவுக்கு பதில் சீனாவுக்கு வழங்க இலங்கை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.