அமெரிக்காவில் சீன தூதரகம் மூடப்பட்டதற்கு சீனா கண்டனம்!

அமெரிக்க – சீன இடையே, மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஹூஸ்டனில் செயல்பட்டு வரும் சீன துாதரகத்தை மூட, அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது, சீனாவை ஆத்திரமடைய செய்துள்ளது.
‘கொரோனா’ வைரஸ் முதலில் பரவத் துவங்கிய நாடான சீனா மீது, அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. வைரஸ் மூலம், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு, சீனா பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதற்கிடையே, உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு, சீன அதிகாரிகளை தண்டிக்கும் வகையில், அமெரிக்காவில் ஒரு சட்டத்தை, அதிபர் டிரம்ப் கொண்டு வந்தார். இது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில், பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டனில் இயங்கி வரும் சீன துாதரக வளாகத்திற்குள், நேற்று முன்தினம் மாலை, அதன் அதிகாரிகள், ஆவணங்களை தீயிட்டு கொளுத்தி உள்ளனர்.
அதன் புகை, வெளியே தெரியும் அளவிற்கு, அதிக அளவிலான ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளது. ஆனால், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினரை, உள்ளே செல்ல, சீன துாதரக அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, சீன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, அந்த துாதரகத்தை மூட, அமெரிக்க அரசு உத்தரயவிட்டு உள்ளது.
துாதரகத்தை மூடும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு, சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது:
ஹூஸ்டனில் உள்ள சீன துாதரகத்தை மூட உத்தரவிட்டு, அமெரிக்கா எடுத்துள்ள முடிவு, மிகவும் தவறானது. இதை, வன்மையாக கண்டிக்கிறோம். ஆத்திரமூட்டும் வகையில் உள்ள அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, சர்வதேச சட்டம் மற்றும், இருதரப்பு துாதரக ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். இந்த நியாயமற்ற நடவடிக்கை, இருதரப்பு உறவை சீர்குலைக்கும். ஆகையால், உடனடியாக இந்த உத்தரவை, அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.