காஷ்மீரில் 5 நாட்களில் 3 தாக்குதல்கள் – பா.ஜ.கவை விட்டு அலறி ஓடும் நிர்வாகிகள்

ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க.,வில் இணைந்துள்ள மாவட்ட தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்களை காஷ்மீர் போராளிகள் குறிவைத்து தாக்கி வருவதால் நூற்றுக்கணக்கானோர் பா.ஜ.க.,விலிருந்து விலகி உள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக அறிவித்து கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தற்போது கவர்னரின் கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட பலர் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். அவர்களை அச்சுறுத்தும் வகையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் 3 பா.ஜ.கவினர் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வியாழனன்று தெற்கு காஷ்மீரின் அனந்தநாகு மாவட்டத்தைச் சேர்ந்த சஜ்ஜத் அகமது எனும் பஞ்சாயத்து தலைவர் அவரது வீட்டிற்கு வெளியே கடுமையாக தாக்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பஞ்சாயத்து தலைவர் ஆரிப் அகமது ஷா என்பவரும் தாக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளார். இந்த நிலையில் இன்று காலை புத்கம் மாவட்டம் ஓம்போரா நகரில், மாவட்ட பா.ஜ.க தலைவர் அப்துல் ஹமீது நஜ்ஜார் (38) என்பவரை மர்ம நபர் ஒருவர் சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். அவரும் ஆபத்தான நிலையில் உள்ளார்.

பா.ஜ.க.,வில் இருப்பவர்களை குறி வைத்து தொடர் தாக்குதல் நடத்தப்படுவதால் ஏராளமானோர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். “எந்தவொரு பதற்றமும் இல்லாமல் வாழ்க்கையில் கவனம் செலுத்தலாம். குடும்பத்தினருக்கு உணவளிக்கலாம் என்று எண்ணி பா.ஜ.க.,வில் சேர்ந்தேன். நான் படிக்காதவன். கூலி வேலை செய்கிறேன். இப்போது பா.ஜ.க.,வில் இருந்து விலகிவிட்டேன்.” என்று வானி என்பவர் கூறியுள்ளார். கடந்த மாதம் 10 போலீசாரின் பாதுகாப்புடன் வலம் வந்த வாசிம் பாரி எனும் பா.ஜ.க தலைவர், அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர், போராளிகள் மூலம் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.