“பாதிக்கப்பட்ட பத்திரிகை துறைக்கு சிறப்பு சலுகை வேண்டும்” – ஐ.என்.எஸ் தலைவர் ஆதிமூலம்

கொரோனா தொற்று காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ள பத்திரிகை துறையை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சலுகை திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும் என ஐ.என்.எஸ் தலைவர் ஆதிமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து இந்திய பத்திரிகைகள் சங்க பொதுச் செயலாளர் மேரி பால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:
கொரோனா தொற்று காரணமாக எதிர்பாராத விதத்தில் பல்வேறு பாதிப்புகளை பத்திரிகை துறை எதிர்கொண்டுள்ளது. பொது முடக்கத்தால் விளம்பரங்கள் குறைந்தன. விநியோகமும் குறைந்தன. இதன் காரணமாக பத்திரிகை நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.
இதன் காரணமாக பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள் ஒரு சில பதிப்புகளை காலவரையின்றி நிறுத்தி கொண்டன. சில நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டு விட்டது. கடந்த எட்டு மாதங்களில் சுமார் ரூ.12,500 கோடி இழப்பை சந்தித்து உள்ளன. நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்தம் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
நேரடியாகவும் மறைமுகமாகவும் இத்துறையில் ஈடுபட்டுள்ள 30 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். மேலும், பத்திரிகைத் துறையைச் சார்ந்து இயங்கும் தொழிலகங்கள், அச்சகங்கள் உள்ளிட்டவையும் பாதிப்பை எதிர் கொள்கின்றன.