25 சதவீதமே செயல்படும் சிறுநீரகம்!! லாலுவிற்கு உடல்நிலை முடங்கும் அபாயம்..

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கும் லாலு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவரது சிறுநீரகம் 25 சதவீதமே மட்டுமே செயல்படுகிறது.
ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று 2017-ம் ஆண்டு முதல் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
முதலில் ராஞ்சி ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் 2018 ஆகஸ்டு மாதம் அங்குள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அதிலிருந்து தொடர்ந்து ஆஸ்பத்திரியிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில் அவரது உடல்நிலை மோசமாகி வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர் உமேஷ் பிரசாத் தெரிவித்து இருக்கிறார்.
லாலு பிரசாத்திற்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு நோய் உள்ளது. இதன் காரணமாக அவருடைய உள் உறுப்புகள் பலவும் பாதிக்கப்பட்டு உள்ளன.
சிறுநீரகமும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது அவருடைய சிறுநீரகம் 25 சதவீதம் மட்டுமே செயல்படுகிறது. இதனால் எந்த நேரத்திலும் அவரது உடல்நிலை முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருப்பதால் அதை மீண்டும் சரி செய்ய முடியாது. அதற்கான மருந்துகள் இல்லை. சிறுநீரக இயக்கத்தையும் சீர்படுத்த முடியாது. மாற்று சிறுநீரகம் பொருத்துவதும் இப்போது சரியாக இருக்காது.
அவருடைய உடல்நிலை எப்போது வேண்டு மானாலும் நிலை குலையலாம் என்பதால் தீவிர கண்காணிப்பு தேவைப்படுகிறது. இதற்காக அவரை வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டியதில்லை.
இங்கேயே தொடர்ந்து சிகிச்சை பெறலாம். உடல் நிலை மோசமாக இருப்பது தொடர்பாக நாங்கள் ஜெயில் அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட துறையினருக்கும் தகவல்களை அனுப்பி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.