புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது திரைப்பட உதவி இயக்குநர் குத்திக் கொலை!!

சென்னை அய்யப்பன்தாங்கலில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது திரைப்பட உதவி இயக்குநர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ருத்ரா(25). இவர் சென்னை வளசரவாக்கத்தில் தங்கி திரைத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார்.
புத்தாண்டையொட்டி அதனை கொண்டாடுவதற்காக நள்ளிரவு போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலில் உள்ள உதவி இயக்குநர் மணிகண்டன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மணிகண்டன் அவரது நண்பர்களுடன் மது அருந்தி, கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடி உள்ளார். அப்போது மணிகண்டனுக்கும், ருத்ராவிற்கும் இடையே வாக்குவதாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மணிகண்டன் ருத்ராவை ஆபாசமாக பேசியதை அடுத்து ஆத்திரமடைந்த ருத்ரா மணிகண்டனை தாக்கியுள்ளார். அப்போது அவரது விரலில் அணிந்திருந்த மோதிரம் நெற்றியில் பட்டதில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது.
இதையடுத்து வீட்டிற்குள் சென்ற மணிகண்டன் கத்தியை எடுத்து வந்து ருத்ரா வயிற்றில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ருத்ராவை அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு காவலர்கள் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் உதவி இயக்குநரை மற்றொரு உதவி இயக்குநர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் திரையிலகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.