லஞ்சத்த கையில கொடுக்காதீங்க.. “பாக்கெட் பே” பண்ணுங்க!! – சிக்கிக் கொண்ட பெண் காவலர்

பெண் காவலர் லஞ்சம் வாங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது

பூனே நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியை கவனித்துக் கொண்டிருந்த பெண் காவலர் ஒருவர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்றதை அடுத்து பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை துணை போலீஸ் கமிஷனர் எடுத்துள்ளார். அவர் மீது துறை  ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி பகுதி சந்திப்பில் பணியில் இருந்த அந்த பெண் காவலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியிருந்தார். கையூட்டு பெறுவதை  மறைக்கும் வகையில் வாகன ஓட்டிகளிடம் ரூபாயை தனது பேண்டின் பின்  பாக்கெட்டில் வைக்கும் படி வற்புறுத்தினார் அவர். பலரிடம் அவர் இப்படி கையூட்டு பெற்றதை அந்த இடத்தில் சில இளைஞர்கள் மறைந்திருந்து செல்போனில்  படம் பிடித்துள்ளனர்.

அதோடு அந்த காட்சிகள் சமூக வலைத்தளத்திலும் அப்லோட் செய்துள்ளனர். அந்த வீடியோ வைரலானதோடு உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. அதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். 

இந்த செயலில் ஈடுபட்டது பெண் காவலர் ஸ்வாதி சோனர் என அடையாளம் தெரிந்துள்ளது. அதையடுத்து நெட்டிசன்கள் அவரை சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்தும் வருகின்றனர். அவர் லஞ்சம் பெற்ற இடத்திற்கு அருகே நான்கு காவலர்களும், காவல் அதிகாரியும் அங்கு இருந்துள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு இதில் தொடர்பு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x