“அமைச்சர் பையனையே மாஸ்க் போட சொல்றியா?” காலியான போலீஸ் வேலை!

குஜராத்தில் ஊரடங்கை மீறிய பா.ஜ.க. அமைச்சர் மகனின் காரை நிறுத்திய பெண் போலீஸ், தன் வேலையை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார்.

வேலை ராஜினாமா செய்ய வைக்கப்பட்ட பெண் போலீஸ் சுனிதா

குஜராத்தில் சூரத் நகரில் பெண் கான்ஸ்டபிளாக இருப்பவர் சுனிதா யாதவ், இவர் கடந்த புதன்கிழமை இரவு சூரத்தின் மங்கத் சௌக் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அம்மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடைமுறைகளை மீறி ஐந்து பேர் கொண்ட கும்பல் மாஸ்க் அணியாமல் காரில் வந்துள்ளனர். சுனிதா அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளார்.

அப்போது அவர்கள், அம்மாநில பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் கனானியின் மகனான பிரகாஷ் கனானிக்கு, போன் செய்து சம்பவத்தை விளக்கியுள்ளனர்.

அடுத்த சில மணி நேரத்தில் பிரகாஷ் வந்து, தன் நண்பர்களை விடுவிக்கும்படி கேட்டுள்ளார், ஆனால், கான்ஸ்டபிள் சுனிதா விட மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ‘எங்கள் கட்சிதான மத்தியிலும் ஆட்சியில் இருக்கிறது. நான் சொல்வதை செய்’ என்று ஒருமையில் பேசி உத்தரவிட்டுள்ளார். அதற்கு, `நான் உங்கள் வீட்டு வேலைக்காரியோ, அடிமையோ இல்லை’ என சுனிதா காட்டமாக பதில் அளித்துள்ளார்.

முதல் வீடியோவில் பெண் போலீசுடன் வாக்குவாதம் செய்யும் அமைச்சர் மகன்
இரண்டாவது வீடியோ, அமைச்சரே நேரடியாக பேசும் காட்சி

பிறகு சுனிதா, தன் காவல் நிலையத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து விஷயத்தைத் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் சம்பவ இடத்திலிருந்து வெளியேறுமாறு சுனிதாவுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. அமைச்சரின் மகனும் கான்ஸ்டபிள் சுனிதாவும் பேசிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமைச்சரின் மகனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கான்ஸ்டபிள் சுனிதாவுக்கு பாராட்டும் ஆதரவும் தெரிவித்தும் நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து இந்த விவகாரம் பெரியதாகவே, நேற்று அமைச்சரின் மகன், நண்பர்கள் அனைவரும், ஊரடங்கை மீறியதாகக் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு பழிவாங்கும் விதமாக, கான்ஸ்டபிள் சுனிதாவை மனஅழுத்ததுக்கு ஆளாக்கி, போலீஸ் வேலையை ராஜினாமா செய்ய வைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குஜராத்தில் சர்ச்சையாகியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x