இங்கிலாந்திலிருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி..!

இங்கிலாந்திலிருந்து தமிழகம் வருகை தந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை பிரிவினை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

ஆய்விற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இங்கிலாந்திலிருந்து தமிழகம் திரும்பிய 5 பேருக்கு இதுவரை நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஏற்கனேவே ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் கடந்த சில நாட்களில் இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய 2390 நபர்களில் 1126 நபருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது எனவும் கடந்த ஒன்றரை மாதத்தில் இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த நபர்களை கண்டறிந்து அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் கூறினார்.

சென்னையை சேர்ந்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட உடன் அவரோடு தொடர்பில் இருந்த 18 நபர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. நேற்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் மதுரையில் இருந்து ஒருவரும் தஞ்சையை சேர்ந்த 2 பேருக்கும் சென்னை முகப்பேரை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

28ஆம் தேதி மருத்துவ ஆலோசனையில் வெளிநாட்டில் இருக்கும் இந்த அசாதாரண சூழ்நிலை குறித்து ஆய்வு செய்வார்கள் எனவும் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களின் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு என தனியாக 120 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டால் தனி பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என கூறினார்.

மேலும் மக்களின் ஒத்துழைப்பு குறைந்து வருகிறது ஆதலால் மக்கள் முறையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் இதனால் மக்கள் பதட்டமடைய வேண்டாம் என்றும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மக்கள் அளித்த ஒத்துழைப்பை தற்போதும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்பு மருந்துகள் தயாரான பின் தமிழகம் வரும் பொழுது அதனை பாதுகாக்க 51 நடமாடும் குளிர்பதன மருந்துகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x