குமரிமாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த நோயாளிகள் ஏராளமானோர் அட்மிட்ட செய்யப்ட்டுள்ளனர். இந்நிலையில், மருத்துவமனைக்கு டாக்டரோ நர்ஸோ ஒருவர் கூட வருவதில்லை என்று கொரோனா நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில், வெறும் நோயாளிகள் மட்டும் காணப்படுகின்றனர். பெயருக்கு கூட, நர்ஸ் இல்லை. நோயாளிகள் வெறுமனே படுக்கைகளில் கிடத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களை கண்காணிக்கவோ, தேவையான மருத்துவ உதவிகளை செய்யவோ சுகாதார ஊழியர்கள் யாருமே அந்த பகுதியில் இல்லை.
கடந்த செவ்வாய் கிழமைதான், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுவரும் உணவுகள், சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் ஆய்வு நடத்தினார்.

மருத்துவக் கல்லூரி முதல்வா் மற்றும் மருத்துவ அலுவலா்களுடன் நாகா்கோவில் அரசினா் விருந்தினா் மாளிகையில் ஆலோசனை நடத்திய ந.தளவாய்சுந்தரம் “குமரி மாவட்டத்தில், கரோனா நோயாளிகளுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் சிறப்பாக சிகிச்சை மற்றும் வசதிகளை செய்துவருகிறாா்கள்.
நாளுக்குநாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாவதால், அதற்கேற்ப அடிப்படை வசதிகளும், உணவும் கிடைத்திட ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரேவின் ஏற்பாட்டில், பழங்கள், பழ ஜூஸ், கபசுரக் குடிநீா் ஆகியவை வழக்கமான உணவோடு சோ்த்து வழங்கப்படுகிறது. நள்ளிரவில்கூட நோயாளிகளுக்கு அவசர உணவாக ரொட்டி, பழங்கள் வழங்கப்படுகின்றன. மாலையில் நோயாளிகளுக்கு சுண்டல், பயறு வகைகள், பால் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், நோயாளிகள் மூலம் வெளிவந்துள்ள இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.