முந்திரி தோல் மூட்டை காட்டி 21 கோடி மோசடி – பஞ்சாப் நேஷனல் வங்கியை அதிர வைத்த பயங்கரம்

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் சூர்யாஸ்ரீ கேஷ்யூ புராடக்ட்ஸ் நிறுவனம் முந்திரி பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான சூர்யா ரெட்டி, பத்ரவதி ஆகியோர், கடந்த 2011-ல் ராஜமுந்திரி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.4 கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள்.
பின்னர் இந்தக் கடனை ரூ.7.45 கோடியாக அதிகரித்திருக்கிறார்கள். மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நிறுவனத்தின் பெயரில் இருக்கும் குடோன், அவற்றில் சேமித்துவைக்கப்பட்டிருந்த பொருட்களை ஈடாகக் காட்டி கடன் தொகை ரூ.20 கோடியாக உயர்த்தி உள்ளனர். தற்போது அந்த நிறுவனத்தின் குடோனில் வங்கி அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது, மோசடி நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
அதாவது 13,573 முந்திரி மூட்டைகள் சேமிப்பில் உள்ளதாக கணக்கு காட்டி, ஈடாக வைத்து பணம் பெற்றுள்ளனர். அந்த மூட்டைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அவற்றில் முந்திரிக்குப் பதிலாக முந்திரித் தோல் மட்டுமே இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
இதையடுத்து வங்கி அதிகாரிகள் புகாரின்பேரில் சூர்யாஸ்ரீ கேஷ்யூ புராடக்ட்ஸ் நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிந்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் சூர்யா ரெட்டி, பத்ரவதி, சுதாகர் ரெட்டி, மத்திய அரசின் தேசிய மொத்தக் கையாளுதல் நிறுவனத்தின் (National Bulk handling corporation) தலைவர் விஜய் கெல்கர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்திருக்கிறது சிபிஐ.
மத்திய அரசு அதிகாரிகளின் உதவியுடனே 13,573 மூட்டைகளில் இருந்த முந்திரிகளுக்குப் பதிலாக முந்திரியின் தோலை வைத்து ஏமாற்றியதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்திருக்கிறது.