சட்லஜ் – யமுனா கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் பஞ்சாபே பற்றி எரியும் – முதல்வர் அமரீந்தர் சிங் ஆவேசம்

சட்லஜ் – யமுனா கால்வாய் இணைப்பு திட்டத்தை தொடங்கினால், பஞ்சாப் மாநிலமே பற்றி எரியும் என அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் பாயும் சட்லஜ் உள்ளிட்ட நதிகளின் தண்ணீரை, அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வகை செய்திருக்கும் திட்டம் தான், சட்லஜ் – யமுனா இணைப்பு கால்வாய் திட்டம்.
இந்த திட்டத்தின் கீழ், பஞ்சாப், அரியானா மாநில அரசுகள் 214 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்க 1976-ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. இத்திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு வழக்கு தொடர்ந்தது. இதில் பஞ்சாப்பிற்கு எதிராக தீ்ர்ப்பு வெளியானது.

இந்நிலையில், நதிநீர் பங்கீடு தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கல்வாய் இணைப்பு திட்டத்தை தொடர பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கிடம் வலியுறுத்தப்பட்டது.
அப்போது பேசிய பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், சட்லஜ் – யமுனா கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால், ஒட்டுமொத்த பஞ்சாப் மாநிலமே பற்றி எரியும் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

முன்னதாக இந்த திட்டத்தால் தனக்குரிய தண்ணீர் குறைந்துவிடும் என கருதி உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு வழக்கு தொடுத்தது. ஆனால் கால்வாயை கட்டி முடிக்குமாறு 2003-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு மாறாக பஞ்சாப் அரசு புதிய சட்டம் இயற்றியது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அரியானா அரசு முறையிட்டது.
அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பஞ்சாப் அரசு கொண்டு வந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இது பஞ்சாப் மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.அதே நேரத்தில் அவர்கள் நிலத்தை கையகப்படுத்தாமல், இப்போதைய நிலை தொடர உத்தரவிடப்பட்டுள்ளது.