ஐபில் 2020:சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி….

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 34வது ஆட்டத்தில் கேப்டன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதன்படி சென்னை அணியின் சார்பில் சாம் கர்ரண் மற்றும் பாப் டூ பிளஸ்சிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அந்த ஜோடியில் சாம் கர்ரண் (0) ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக களமிறங்கிய ஷேன் வாட்சன், டூ பிளஸ்சியுடன் ஜோடி சேர்ந்தார்.
சீரான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ரன் சேர்த்து வந்த இந்த ஜோடியில் ஷேன் வாட்சன் 36(28) ரன்களில் போல்ட் ஆனார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூ பிளஸ்சிஸ் 39 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய டூ பிளஸ்சிஸ் 58(47) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் டோனி 3(5) ரன்னில் கேட்ச் ஆனார்.
அடுத்ததாக ராயுடுவுடன், ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். அதிரடியில் கலக்கிய இந்த ஜோடி, டெல்லி அணியினரின் பந்து வீச்சை நாலா புறமும் சிதறடித்தனர். இறுதியில் ஜடேஜா 33(13) ரன்களும், அம்பத்தி ராயுடு 45(25) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 180 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங்கை துவக்கியது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா ரன் எதுவும் இன்றி டக் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான் நங்கூரம் போல நிலைத்து நின்றாலும், மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ரகானே ( 8 ரன்கள் ), கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் (3 ரன்கள்) என ஆட்டமிழந்தனர்.

எனினும், ஷிகர் தவான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் விரட்டினர். இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் சதம் விளாசியதோடு டெல்லி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். 19.5-ஓவரில் 185 ரன்கள் எடுத்து
டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

9 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணிக்கு இது 7-வது வெற்றியாகும். இதன் மூலம் 14 புள்ளிகளுடன் ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது 6-வது தோல்வியாகும்.