விநாயகர் சதுர்த்தி கொண்டாட வழிவிடுமா கொரோனா? கலக்கத்தில் கைவினை கலைஞர்கள்!!!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக கண்ணை பறிக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் 2 அடி முதல் 10 அடி வரை 40 வகைகளில் விற்பனைக்கு தயார் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் வாங்குவதற்குதான் ஆள் இல்லை எனக் கூறுகிறார்கள் கடவுள் சிலைகளை படைக்கும் கை வினைஞர்கள். 10 லட்சம் வரை வங்கியில் கடனாகவும், வட்டிக்கும் பணம் வாங்கியும் சிலைகளை செய்துள்ள நிலையில், இதுவரை ஒரு சிலையை கூட வாங்க யாரும் முன்வரவில்லை எனக் கூறுகின்றனர்.
இம்மாதம் முழுவதும் ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்த அனுமதி வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் போட்ட முதல் மட்டுமல்லாது மொத்த உழைப்பும் வீணாகிவிடுமோ என்று கைவினைஞர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
நெல்லையில் உள்ள கைவினை கலைஞர் ஒருவர், “18 ஆண்டுகளாக நெல்லைக்கு வந்து விநாயகர் சிலை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாகவும், வழக்கமாக 1,500 சிலைகள் தயார் செய்யும் தாங்கள், இந்த ஆண்டு 150 சிலைகள் மட்டும் செய்துள்ள போதும் ஒரு சிலை கூட விற்கவில்லை என வருத்தம் தெரிவித்தவர். இதே நிலை நீடித்தால் ஊருக்கு கூட திரும்பி செல்ல முடியாத நிலை ஏற்படும் என கூறியுள்ளார்.
கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்பதே கைவினை கலைஞர்களின் கோரிக்கையாக உள்ளது. கொரோனா கொள்ளை நோய் இவர்களுக்கு வழி விடுமா? அரசு அனுமதி கிடைக்குமா?