பறவைக் காய்ச்சல் எதிரொலி.. கோழிப் பண்ணைகள் கண்காணிப்பு ..

பறவைக் காய்ச்சலைத் தடுக்க கால்நடைத் துறையினர் கோழிப் பண்ணைகளை கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தையொட்டிய கேரளா மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நோய், கேரளா மட்டுமின்றி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வேகமாக பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மத்திய அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் நீர்நிலைகளுக்கு அருகே, உயிரியல் பூங்காக்கள், கோழிப் பண்ணைகள் போன்ற பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனையடுத்து, சுகாதாரத்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம், வனத்துறையினர், வருவாய்த் துறையினர் கேட்டறிந்து, தினமும் தகவல் பெற வேண்டும். கால்நடைத்துறை மற்றும் வனத்துறையினர் சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, கடலுார் மாவட்டத்தில், வனத்துறை மற்றும் கால்நடைத் துறை மூலம் கோழிப் பண்ணைகள், வெளி மாநில பறவைகள் மற்றும் உள்நாட்டு பறவைகள் தங்குமிடங்களான பிச்சாவரம் வன சுற்றுலா மையம், வீராணம் ஏரி, பெருமாள் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர், பறவைகள் ஏதேனும் இறந்து கிடக்கிறதா என கண்காணித்து வருகின்றனர். சுற்றுப்புற பகுதி பொதுமக்களிடமும் விசாரித்து வருகின்றனர்.
மேலும், கால்நடைத் துறையினர் மாவட்டம் முழுதும் உள்ள கோழிப்பண்ணைகள், காடை வளர்ப்பு பண்ணைகளில் கோழி மற்றும் காடைகளுக்கு நோய் அறிகுறி உள்ளதா, இறப்பு ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
கடலுார் மாவட்ட சுகாதாரத்துறை மூலம், கால்நடைத் துறையினரிடம் தினமும் இது தொடர்பாக அறிக்கை பெறப்பட்டு, தமிழக சுகாதாரத் துறைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடலுார் மாவட்டத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் தொடர்பாக எந்த அறிகுறியும் இல்லை. மாவட்டம் முழுதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்தார்.