இந்தியாவில் தடுப்பூசி போட்ட 70-க்கு மேற்பட்டோருக்கு பக்க விளைவு… தமிழகத்தில்?

இந்தியாவில் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில், தடுப்பூசியைப் பெற்ற 70 க்கும் மேற்பட்டோருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில், இந்தியாவிலும் நேற்று முதல் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி போட்டு கொண்ட 70 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 52 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டது. அதில் டெல்லியில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுமார் 51 பேர் சிறிய அளவிலான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஒருவருக்கு கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இப்போது எய்ம்ஸில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் 21 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனினும், தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர், மருத்துவனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் நிலையில் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போடப்பட்ட முதல் நாளில் மேற்கு வங்கத்தில் 14 பேருக்கு பக்க விளைவுகளை எதிர்கொண்டதாக் பதிவாகியுள்ளன, அதில் 35 வயதான செவிலியியர் தடுப்பூசி பெற்ற சில நிமிடங்களில் சுயநினைவை இழந்து நில் ரத்தன் சிர்கார் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டார். அம்மாநிலத்தில் தடுப்பூசி போடப்பட்ட 15,707 சுகாதாரப் பணியாளர்களில் இவரும் ஒருவர். செவிலியருக்கு ஏற்கனவே மருந்துகள் தொடர்பான ஒவ்வாமை இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் ஒரு நீண்டகால ஆஸ்துமா நோயாளி என்றும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் தமிழகத்தைப் பொருத்த வரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இதுவரை யாருக்கும் பக்க விளைவு இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவ துறையை சார்ந்தவர் என்பதால் தானும் தடுப்பூசி போட்டுகொண்டதாகவும், தற்போது செலுத்தப்பட்டு வருவது தடுப்பூசியே தவிர பரிசோதனை அல்ல. எனவே யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.