103 கிலோ தங்கக்கட்டிகள் திருட்டு: தீவிர விசாரணை

சென்னையில் சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கக்கட்டிகள் திருடுபோனது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தற்போது சிபிஐ இன்ஸ்பெக்டர் மற்றும் வங்கி அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
சென்னை சவுகார்பேட்டையில் சுரானா நிறுவனத்தில் 2012இல் சிபிஐ ரெய்டு நடத்தியது. அப்போது சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டதாக 400 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்தனர். இதனை வங்கி லாக்கரில் பாதுகாத்தனர். அதில் 103 கிலோ தங்க கட்டிகள் மாயமானது தற்போதுதான் தெரியவந்திருக்கிறது.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிபிசிஐடி வழக்கை கையில் எடுத்துள்ளது. எஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் லாக்கர்களை இரண்டு முறை ஆய்வு செய்தனர். தடய அறிவியல் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சுரானா நிறுவன நிர்வாகி விஜய்ராஜ், தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சமயத்தில் சிபிஐ இன்ஸ்பெக்டராக இருந்த ரஞ்சித் சிங் ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். மேலும் மற்றொரு ஆய்வாளரான மாணிக்கவேல், எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் டேவிட், நாகராஜன் ஆகியோரிடமும் நேற்று வாக்குமூலம் பெற்றனர்.
கள்ளச்சாவியை பயன்படுத்தி 100 கிலோ தங்க கட்டிகள் திருடியிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதற்கு வங்கியிலும், சிபிஐயிலும் சிலர் உடந்தையாக இருந்து இருக்க வாய்ப்பிருப்பதாக சிபிசிஐடி வட்டாரங்கள் கூறுகின்றன.