இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு – எஸ்டிபிஐ கண்டனம்!

தமிழக மீன்பிடி படகுமீது ரோந்து கப்பலை மோதவிட்டு 4 மீனவர்களைக் கொலை செய்த இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசின் நிலை வெட்கக் கேடானது என எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து கடந்த ஜனவரி18 ஆம் தேதி விசை படகு ஒன்றில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அந்த மீனவர்களின் விசைப் படகை இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் ஒன்று முட்டி மோதித் தள்ளியதில் அந்தப் படகு மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படகில் இருந்த மீனவர்களின் நிலை என்னவானது என தெரியாத நிலையில், அந்த விசைப் படகில் இருந்த மெசியா, நாகராஜ், சாம், செந்தில்குமார் ஆகிய நான்கு மீனவர்களின் உடல்களும் படுகாயங்களுடன் இலங்கை கடல் எல்லைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.
இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை ரோந்து கப்பல்கள் மூலம் தொடர்ந்து அச்சுறுத்தி வந்த இலங்கை கடற்படையினர், அநியாயமான முறையில் தமிழக மீன்பிடி படகின் மீது மோதி 4 மீனவர்களை கொலை செய்துள்ளது. இந்தச் செயலை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை கடற்படையினர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
தொடர்ந்து பல ஆண்டுகளாகவே, தமிழக மீனவர்களை கொலை செய்தும், கொலை வெறி தாக்குதல் நடத்தியும், மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தியும் இலங்கை கடற்படை அத்துமீறி நடந்து வருகிறது. இந்தியக் கடல் எல்லைப் பகுதியில் தமிழக மீனவர்களுக்கு எதிரான தாக்குதல்களில் சளைக்காமல் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது இலங்கைக் கடற்படை. சொந்த நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை இன்னமும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது என்பது உள்ளபடியே வெட்கக் கேடானது.
ஆகவே, தமிழக மீனவர்களை தாக்கிவரும் இலங்கையை எச்சரிக்கை செய்கின்ற விதமாக மத்திய, மாநில அரசுகள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். உயிரிழந்த மீனவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இனிமேல் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் நடைபெறாத வண்ணம் தகுந்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.