தமிழர்களை சீண்டிவிட்டு திட்டு வாங்கும் முன்னாள் நீதிபதி

தமிழர்கள் ஹிந்தி பாடல்களை மனப்பாடம் செய்து பாடம் ஆரம்பித்தால் அவர்களுக்கு ஹிந்தி மீதான விரோதம் மறையும் என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
விளம்பரப் பிரியரான மார்கண்டேய கட்ஜூ அடிக்கடி தமிழக அரசியல், தமிழர்கள், தமிழ் மொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி கடும் விமர்சனத்துக்கு ஆளாவார். ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்ட போது “அவருக்கு தலையில் ஒன்றுமில்லை. மக்கள் ஆன்மிகத்தை விரும்பவில்லை. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு இது தான் தேவை. அது பற்றி ரஜினிக்கு ஏதாவது தெரியுமா?” என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.
கடந்த நவம்பர் மாதம் அதிமுக – பா.ஜ.க. கூட்டணி தான் வெல்லும் என்று பேஸ்புக்கில் பதிவிட்டார். வெற்றியை உறுதி செய்ய மத்திய அரசின் மிகப்பெரும் சக்தி பயன்படுத்தப்படும் என்றார். இந்த சர்ச்சை ஓய்ந்திருந்த நிலையில், புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் வரிசையாக பல ஹிந்தி பாடல்களின் லிங்கை பதிவிட்டு வந்தார். பின்னர் சம்பந்தமே இல்லாமல், தமிழர்கள் நான் பகிர்ந்த ஹிந்தி பாடல்களை மனப்பாடம் செய்து பாடி பழகுங்கள், அப்போது ஹிந்திக்கு எதிரான உங்கள் முட்டாள்தனமான விரோதம் மறையும் என்று குறிப்பிட்டார். இதனால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் அவரை கமெண்ட்டில் திட்டத் தொடங்கினர்.
இதைப் பார்த்தவர், உடனே தமிழர்கள் புத்திசாலிகள், கடின உழைப்பாளிகள். ஆனால் நகைச்சுவை உணர்வு அற்றவர்கள். நான் கிண்டலுக்கு சொன்னதை, கிண்டல் என்றே தெரியாமல் என்னை திட்டி உள்ளனர். வளர வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு ரிப்ளை செய்துள்ள தமிழ் மக்கள், நாங்களும் உங்களை கிண்டல் செய்ததை நீங்கள் சீரியஸாக எடுத்துக் கொண்டீர்கள். வளருங்கள் என பதிலடி தந்துள்ளனர்.