வண்டிகள் பறிமுதல்: காவல்நிலையத்தில் குவிந்து கிடக்கும் சாவிகள்!

ஊரடங்கை மீறியதாக கூறி கைப்பற்றப்பட்ட வாகனங்களின் சாவிகள், காவல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரத்தில், ஊரடங்கை மீறி சென்றதாக கூறி, போலீசார் ஏராளமான வாகனங்களை பறிமுதல் செய்தனர். எனினும், காவல்நிலையத்திலேயே பைக் திருடு போவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, வாகனங்களை அதன் உரிமையாளர்களிடமே ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, காவல் நிலையத்திலிருந்து வாகன உரிமையாளர்களின் செல்போன் எண்ணிற்கு, வண்டியை வந்து எடுத்துச்செல்லும்படி குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. வாகன உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர், வாகனங்களை திரும்ப பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில் சோழவரம் காவல் நிலையத்தின் மூலையில் ஒரு இடத்தில் சாவிகள் அலட்சியமாக குவிக்கப்பட்டுள்ளதையும், உரிமையாளர் ஒருவர் தன்னுடைய சாவியை தேடுவது போல் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. “பணம் கொடுத்து வாங்கியிருந்தால்தானே, வெட்ட வெயிலில் வாகனத்தை இப்படி அலட்சியமாக போட்டு வைத்திருப்பதன் வலி புரியும்” என்று போலீசாரை பொதுமக்கள் இணைய சமூகவலைத்தளங்களில் சாடி வருகின்றனர்.