கண் இமைக்கும் நொடியில் புலியிடமிருந்து தப்பிய பள்ளி மாணவி..?

புலியிடம் இருந்து கண் இமைக்கும் நொடியில் தப்பிய பள்ளி மாணவி. மயங்கி விழுந்ததால் உயிர் தப்பிய அதிசயம் குடகு பொன்னம்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா டி செட்டிகெரே பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவரது பேத்தி சஷ்மா. 2ம் ஆண்டு பியுசி படித்து வருகிறார். நேற்று காலை பள்ளியில் ஆயத்த தேர்வு நடந்ததால் அதில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் புலி ஒன்று இவரை கடந்து சென்றது. சஷ்மா தான் புலியை பார்த்தார்.
ஆனால் புலி சஷ்மாவை பார்க்கவில்லை. இதில் அதிர்ச்சி அடைந்த சஷ்மா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அதிர்ஷ்டவசமாக புலி அங்கிருந்து, காபி தோட்டத்திற்கு சென்றதால், சஷ்மா உயிர் தப்பினார். இதையடுத்து அந்த வழியாக பள்ளிக்கு சென்ற மாணவர்கள், ஊர் பொதுமக்கள் உதவியுடன் சஷ்மாவை கோணி கொப்பா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வனப்பகுதியில் பார்வையிட்டு அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் புலிகள் நடமாட்டம் இருப்பது உறுதியானது. இதற்கு முன்னதாக கிராமத்திற்குள் புகுந்த புலிகள், ஆடு, மாடுகளை வேட்டையாடிவிட்டு சென்றது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் செல்லும் பாதையில் புலிகள் நடமாடியிருப்பதால், மாணவர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற வனத்துறை அதிகாரி வீரேந்திரா தலைமையிலான போலீசார் புலியை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.