பெண் காவலரை திருமணம் செய்த புது மாப்பிள்ளை தற்கொலை..

செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலரை இளைஞர் ஒருவர் காதலித்து 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்த நிலையில் தற்போது தற்கொலை செய்து கொண்டார். பெண் காவலருக்கு ஏற்கனவே 8 வயதில் குழந்தை இருப்பது தெரிய வந்ததால் தற்கொலை முடிவு எடுத்துள்ளார்.
செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்தவர் சங்கீதா. கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் பகுதியை சேர்ந்த யுவராஜை (24) காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் திருமணத்தை இன்ஸ்பெக்டர் அமுதா நடத்தி வைத்தார்.
சங்கீதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 8-வயதில் குழந்தை இருப்பது தெரியவரவே கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரையும் ஒரே மாதத்தில் பிரித்து வைத்தார் இன்ஸ்பெக்டர் அமுதா.
இதனால் மனமுடைந்த யுவராஜ் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே விஷம் குடித்தார். அக்கம்பக்கத்தினர் யுவராஜை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் தன்னுடைய சாவுக்கு காரணம் மனைவி சங்கீதா, சங்கீதாவின் முன்னாள் கணவர் புருஷோத்தமன், பெண் போலீஸ் சந்தியா மற்றும் ஜீவா என்று எழுதி வைத்திருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெண் போலீஸ் சங்கீதாவை கைது செய்யக்கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததும் கலைந்து சென்றனர்.