“தமிழக அரசின் செயல்பாட்டை நியாயப்படுத்த முடியாது” – வேதா நிலைய வழக்கில் நீதிபதி காட்டம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்து வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வகை செய்யும் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.தீபக் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா நினைவு இல்லத்தைப் பராமரிக்க அறக்கட்டளை அமைத்து இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தீபக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன் தெரிவித்தார். தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தில் சமுதாயத்துக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய முன்னாள் முதல்வர்கள், தலைவர்கள் என 17 பேரின் வீடுகள், நினைவு இல்லங்கள் பராமரிக்கப்படுகின்றன.

அந்த தலைவர்கள் வாழ்ந்த வீடுகளை கையகப்படுத்தி நினைவு இல்லங்கள் அமைப்பது புதிதாக இல்லை என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது அதிகாரத்துக்கு உட்பட்டு சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், இன்னும் எவ்வளவு காலத்துக்கு இதுபோல நினைவிடங்கள் அமைக்கப் போகிறீர்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, அனைத்து மறைந்த முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது என்றும் சிறந்த தலைவர்களுக்கு சிலை என்றால் அது காந்தி, நேரு, வல்லபாய் படேல் என்று தான் வைக்க முடியும். ஆனால் அனைத்து தலைவர்களுக்கும் வைக்க முடியாது.

தமிழக அரசின் இந்த நிலை தொடர்ந்தால் துணை முதல்வர்களின் வீடுகளும் மாற்றப்படும் போலிருக்கிறது என்றார்.மேலும் பல நீதிபதிகள் நீதித்துறைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்பதால், அவர்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் சிலை அமைத்தால் நிலைமை என்னாகும்? அவர்களின் படங்களாலேயே நீதிமன்றம் முழுவதும் நிரம்பி விடும் எனவே, தமிழக அரசின் செயல்பாட்டை நியாயப்படுத்த முடியாது என்றார்.அதனை தொடர்ந்து மெரினா முழுவதும் நினைவிடங்கள் அமைக்க ஒதுக்கப்பட்டுவிட்டதா?’ என தலைமை நீதிபதி அமர்வு எழுப்பிய கேள்விக்கு, “மெரினாவில் ஒரு பகுதி நிலத்தில் மட்டுமே நினைவிடங்கள் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அரசு தரப்பில் விளக்கம் கூறப்பட்டது.

பின்னர் ஜெ.தீபக்கின் மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x