இலங்கை பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்ச; பொதுமக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்

9ஆவது நாடாளுமன்றம் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ச சத்திய பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் களனி ரஜமஹா விஹாரையில் (பௌத்த கோயில்) இந்த பதவியேற்பு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இலங்கை வரலாற்றிலேயே, 5 லட்சத்து 27 ஆயிரத்து 364 பெற்று சாதனை படைத்தார்.
இந்நிலையில், இன்று முறைப்படி 4வது முறையாக இலங்கை பிரதமராக பதவியேற்றார். இந்த நிகழ்விற்கு பௌத்த மதக்குருமார்கள், இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத் தலைவர்கள், முப்படையினர், அரசியல்வாதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
களனி ரஜமஹா விஹாரையில் முதலில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றதை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச சத்திய பிரமாணம் செய்துகொண்டார்.
2004ஆம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, அதன்பின்னர் 2018, 2019 ஆகிய ஆண்டுகளிலும் பிரதமராக பதவியேற்றிருந்தார். இந்த நிலையில், இந்த முறை நான்காவது தடவையாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இதேவேளை, இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் புதிய அமைச்சரவை எதிர்வரும் 14ஆம் தேதி கண்டியில் பொறுப்பேற்கவுள்ளது.