இந்தியாவின் இஸ்ரோவுடன் இணைந்து வெள்ளி கோளுக்கு செல்ல தயாராகும் பிரான்ஸ்!
‘வீனஸ்’ எனப்படும் வெள்ளி கோளுக்கு பயணம் மேற்கொள்ளும் ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் திட்டத்தில் இணைந்து செயல்பட உள்ளதாக பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சின் விண்வெளி ஆய்வு நிறுவனமான சி.என்.இ.எஸ். வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: “வீனஸ் எனப்படும் வெள்ளி கோளுக்கு 2025ல் விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான கருவிகளை தயாரிக்கும் பணியில் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘ராஸ்காஸ்மோஸ்’ மற்றும் பிரான்சின் தேசிய அறிவியல் ஆராய்ச்சி அமைப்பான சி.என்.ஆர்.எஸ். ஈடுபட உள்ளன.
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவனுடன், சி.என்.இ.எஸ். தலைவர் ஜீனா யீவ்ஸ் லீ கால் விரிவான பேச்சு நடத்தியுள்ளார். இந்தியா மேற்கொள்ளும் விண்வெளி ஆய்வு திட்டங்களில் ஈடுபட பிரான்ஸ் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது. முதல் முறையாக பிரான்சின் விண்கலம் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட உள்ளது.” இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.