தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்னும் தலைப்பில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிர்கால கனவு இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிவகங்கையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய அவர், “கீழடி அகழாய்வு மூலம் தமிழர்கள் பெருமை அடையக் கூடாது என மத்திய அரசு நினைக்கிறது. அதிமுக அரசு தமிழர்களின் பெருமைகளை அழிக்க நினைக்கும் மத்திய அரசுடன் கூட்டு வைத்துள்ளது. சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரம் அமைத்து தரப்படும்.
கருணாநிதி ஒரு திட்டத்தை கொண்டு வந்தார் என்றால் அதை அதிமுக ஆட்சி நிறுத்திவிடும். விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியவர்தான் முதலமைச்சர் பழனிசாமி. விவசாயத்திற்கு முக்கியமான முல்லைபெரியாறு திட்டம் சிவகங்கை மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும். எதுவும் செய்யாததுதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெரிய சாதனை.
மக்களை பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு எந்த கவலையும் இல்லை. முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிர்கால கனவு இல்லை” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
