விவசாயிகளில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மவுன அஞ்சலி.. டென்ஷனான பாஜக..

டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தக் கூறிய ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜனதா கொறடா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நடைபெற்று வருகின்றன. நேற்று மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி பேசினார்.
அப்போது வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது சில விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என ராகுல் காந்தி, காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார். அதன்படி காங்கிரஸ் உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதற்கு பா.ஜனதா கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அந்த கட்சியின் உறுப்பினரும், பா.ஜனதா கட்சிக்கான மக்களவை கொறடா ராகேஷ் சிங் பேசுகையில் ‘‘நேற்று மக்களவையில் ராகுல் காந்தி செய்தது விதிமுறைக்கு மாறானது. இந்திய தேசியத்தின் ஜனநாயக கோயிலாக கருதப்படும் இந்த இடத்தின் கண்ணியத்தை புண்படுத்தியுள்ளது. இரண்டு நிமிடம் மவுனமாக இருக்க உத்தரவு பிறப்பித்தார். இது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. சகித்து கொள்ள முடியாது. இது சபையை களங்கப்படுத்தும் சம்பவம். ராகுல் காந்தி அனுமதி பெற்றிருக்க வேண்டும். வேண்டுகோளாவது விடுத்திருக்க வேண்டும்.
துரதிருஷ்டவசமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் ராகுல் காந்தி கூறுவதை அப்படியே பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது. ஆனால், மக்களவை காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் அல்ல. ராகுல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்’’ என்றார்.