சிசேரியனுக்குப் பின் இயல்புநிலைக்கு விரைவில் வர டிப்ஸ்..!

இன்று சுகப்பிரசவங்களை காட்டிலும் சிசேரியன் முறை பிரசவங்கள் தான் அதிகமாகிறது. பலவீனமான பெண்கள், உடலில் சத்தின்மை, கர்ப்பகால நோய் சிக்கல், பிரசவநேர சிக்கல் என பல காரணங்கள் சிசேரியன் பிரசவத்துக்கு காரணமாகிறது.
சுகப்பிரசவம் ஆகும் பெண்கள் எளிதில் இயல்புநிலைக்கு திரும்பி விட முடியும். ஆனால், சிசேரியன் செய்த பெண்களுக்கு கொஞ்சம் கடினம்தான். அவர்கள் எளிதில் இயல்புநிலைக்கு திரும்புவதற்கான டிப்ஸ் குறித்துப் பார்க்கலாம்.
குழந்தை பிறந்து முதல் 2 வாரங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் வலி இருக்கத்தான் செய்யும். அதற்கு மருத்துவர்கள் அளித்த மருந்துக்களை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களது வலி, காயம் ஆறவேண்டுமெனில் சரியான உணவு அவசியம்.ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற விட்டமின் சி உள்ள உணவுகள், ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் கொண்ட நட்ஸ் ஆகியவை சாப்பிடுவது நல்லது.
தயிர், மோர், யோகர்ட் போன்ற உணவுகளை உண்பதால் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும். இதனால் வயிற்றுப் போக்கு ஏற்படமால் தடுக்க முடியும். குழந்தை பிறந்து முதல் 6 வாரத்திற்கு கவனமாக இருக்க வேண்டும். வலி முற்றிலும் குணமான பின்பு இயல்பு வேலைகளைச் செய்யலாம்.
பிரசவித்த பிறகு தளர்வாக இருக்கும் வயிறு, இயல்பு நிலைக்கு வர சில மாதங்கள் ஆகும். எனவே தரமான பெல்லி பேண்டை மருத்துவர் அனுமதியோடு அணியுங்கள்.மலச்சிக்கல், நீர் வறட்சி, உடல் சூடு, சிறு சிறு சூடு கட்டிகள் வராமல் தடுக்க போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.
பிரசவத்திற்கு பின் உங்கள் மனநிலைகளும் அடிக்கடி மாறும், திடீரென கோபம், அழுகை, வெறுப்பு போன்ற உணர்வுகள் ஏற்படும். இந்த சமயத்தில் உங்கள் உறவினர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். உங்களை நீங்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள முயற்சியுங்கள்.
இதுபோன்ற உடல்நலப் பிரச்சினை அல்லது சந்தேகம் ஏதேனும் இருக்கும்போது மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.