புதிதாக திருமணமான மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை கைது!

கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டு குளியலறையில் மர்மமான முறையில் இளம்பெண் இறந்து கிடந்த வழக்கில், பெற்ற மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொண்டிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூரைச் சேர்ந்தவர் பாலாஜி. உத்திரமேரூர் தீயணைப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. மகள் செந்தாரகை (23). கடந்த மே மாதம் செந்தாரகைக்கும் அதே ஊரைச் சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்த திருமணத்தில் விருப்பமின்றி இருந்த செந்தாரகை சில நாட்கள் யுவராஜுடன் வண்டலூரில் வீடு எடுத்து தங்கியிருந்துவிட்டு, மீண்டும் உத்திரமேரூருக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி குளியலறையில் மர்மமான முறையில் செந்தாரகை இறந்து கிடந்ததாக கூறி பெற்றோர்கள் அவசர அவசரமாக அடக்கம் செய்ய பார்த்துள்ளனர்.
இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு புகார் அளித்தனர். அவர்கள் செந்தாரகையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது பிரேத பரிசோதனை முடிவு வந்துள்ளது. அதில் செந்தாரகை குளியலறையில் விழுந்து இறக்கவில்லை, கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து செந்தாரகையின் தந்தை பாலாஜியிடம் போலீசார் விசாரித்ததில் தன் மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கணவருடன் சேர்ந்து வாழ முடியாது என கூறியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
தான் கொலை செய்யப்படுவோம் என்பதை அறிந்த செந்தாரகை அது தொடர்பாக ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். தயவுசெய்து என்னை கூட்டிக்கிட்டு போயிடுவாங்க. இவங்க என்னை எதாவது பண்ணிடுவாங்க. தயவு செய்து வாங்க. நான் இந்த போனை தெரியாம பயன்படுத்துறேன். கால் பண்ண வேண்டாம். நேர்ல வாங்க. இவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.