இந்தியாவில், முதல் முறையாக தூக்கிலிடப்பட உள்ள பெண்..

சுதந்திர இந்தியாவில், முதல் முறையாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் தூக்கிலிடப்பட உள்ளார். ஆனால் அவரைத் தூக்கிலிடும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர்தான் முதல் முறையாக சுதந்திர இந்தியாவின் தூக்கிலிடும் அறையை ஒரு மரண தண்டனைக் கைதியாக எதிர்கொள்ளவிருக்கும் பெண்.
தூக்கு தண்டனை விதிக்கப்படும் அளவுக்கு இவர் செய்த குற்றம் என்ன? 2008-ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்துள்ளது. சலீம் – ஷப்னம் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் திருமணத்துக்கு ஷப்னத்தின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி ஷப்னத்தின் ஒட்டு மொத்தக் குடும்பமும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது. அடையாளம் தெரியாத சிலர், ஷப்னத்தின் ஒட்டுமொத்தக் குடும்பத்தினரையும் கொன்று குவித்துவிட்டுச் சென்றதாக ஷப்னம் காவல்துறையிடம் கூறினார்.
ஆனால் உண்மையை அவ்வளவு எளிதில் மறைக்க முடியவில்லை. காவல்துறையின் விசாரணையில், இந்த கொலையில், ஷப்னம் மற்றும் அவரது காதலன் சலீம்தான் செய்தது தெரிய வந்தது. குடும்பத்தினர் அனைவருக்கும் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, அனைவரும் உறங்கிய பிறகு, சலீமை வரவழைத்து பெற்றோர் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கொன்றுகுவித்துள்ளார். தனது வீட்டிலிருந்த மிகச் சிறிய குழந்தையை கூட ஷப்னம் விட்டுவைக்கவில்லை.
இந்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், தூக்கு தண்டனை விதித்தது. அவர்களது தொடர் முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்டு, 2015-ஆம் ஆண்டு அவர்களது தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்தியாவிலேயே பெண்களை தூக்கிலிடும் அறை ஒரே ஒரு இடத்தில்தான் உள்ளது. ஆனால், சுதந்திர இந்தியாவில் அந்த அறை இதுவரை பயன்படுத்தப்பட்டதே இல்லை. அது மதுரா சிறையில் 1870-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.