“வேளாண் சட்டம் குறித்து எடப்பாடியுடன் விவாதிக்க நான் தயார்.. அவர்??” – பி.ஆர்.பாண்டியன் கேள்வி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திட்டங்களால் தமிழக விவசாயிகளுக்குப் பாதிப்பு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கும் நிலையில் அது குறித்துத் தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிவர் மற்றும் புயல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நேரில் பார்வையிட்டு வருகிறார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்டபின் கிராமத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

6 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்ட நிலையில் 1.32 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கணக்கெடுப்புக்கு முன்னதாகவே இலக்கைச் சொல்லிக் கணக்கெடுப்பு செய்வது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதனை மறுபரிசீலனை செய்து சிறிய, பெரிய விவசாயிகள் என்ற பாகுபாடின்றி முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும். இழப்பீடு தொகை குறித்து முதல்வர் அறிவிக்காதது விவசாயிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானவை என்று விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழகத்திலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த பிரதமர் மோடி, சட்டத்தின் சாதக பாதகங்கள் குறித்துத் தெளிவுபடுத்த வாய் திறக்க மறுக்கிறார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எழுத்துபூர்வமான உத்தரவாதம் தரப்படும், பாதிக்கும் விஷயங்கள் குறித்து சில மாற்றங்களைச் செய்து சட்டத்தைக் கொண்டுவர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தான் ஆதரித்த ஒரே காரணத்துக்காக ஒட்டுமொத்தத் தமிழக விவசாயிகளும் பாதிக்கக்கூடிய சட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவாகப் பேசுவது விவசாயிகள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் உடனடியாக அந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் இதுகுறித்து முதல்வரோடு நேரடியாக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.

எந்த இடத்திலும், பொது மேடையிலோ அல்லது அவரது அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் முன்னிலையிலோ, அல்லது அவர் விரும்புகிற ஊடகத்தில் அவர் விவாதிக்கத் தயார் என்றால், நான் அவரோடு உட்கார்ந்து சட்டம் குறித்து விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறேன்.”

இவ்வாறு தெரிவித்தார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x