அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,கடலூர், சேலம் மற்றும் பெரம்பலூரிலும்,அடுத்த 48 மணி நேரத்தில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.