சென்னையை தலைமையிடமாக கொண்ட டைல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.220 கோடி கருப்பு பணம்..

வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் சென்னையை தலைமையிடமாக கொண்ட டைல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.220 கோடி அளவுக்கு கணக்கில் வராத கருப்பு பணம் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: டைல்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் குழுமத்திற்கு சொந்தமான 20 இடங்களில் கடந்த பிப்., 26 அன்று ரெய்டு நடைபெற்றது. தமிழ்நாடு, குஜராத், கோல்கட்டா ஆகிய இடங்களில் நடந்த ரெய்டுகளில் ரூ.8.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கணக்கில் வராமல் டைல்ஸ் விற்பனை மற்றும் கொள்முதலில் ஈடுபட்டுள்ளனர். அந்த பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள், மென்பொருட்கள் ரகசிய அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. 50 சதவீத பரிவர்த்தனைகள் கணக்கில் வராதது தெரிந்தது.
முந்தைய வருவாயுடன் ஒப்பிடும் போது ரூ.120 கோடி வருவாயை மறைத்திருக்கக்கூடும். மேலும், போலி நிறுவனங்கள் மூலமாக ரூ.100 கோடிக்கு கணக்கு காட்டியிருக்கிறார்கள். இதன்படி மொத்தமாக கணக்கில் வராத தொகை ரூ.220 கோடி என்று அறிக்கையில் கூறியுள்ளனர். மேலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க முழுமையாக தயாராக உள்ளனர்.
ஏப்ரல் 6-ல் தமிழ்நாடு, புதுவையில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கணக்கில் வராத பண நடமாட்டத்தை கண்காணிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.