குன்னூரில் மாணவியை ஏமாற்றி பாலியல் தொல்லை: இளைஞருக்கு 44 ஆண்டுகள் சிறை

குன்னூர் அருகே திருமணம் செய்வதாகக் கூறி 17 வயது மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு, மகளிர் நீதிமன்றத்தில் உச்சபட்ச தண்டனையாக 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ஜெயந்தி நகரைச் சேர்ந்தவர் ஆண்டனி வினோத் (34). ஏற்கனவே திருமணமான இவர் சமையல் கலைப் படிப்பு முடித்து வேலை தேடி வந்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியில் 12-ம் வகுப்புப் படித்த மாணவியைத் திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் கர்ப்பமான மாணவியின் கருவைக் கலைக்க மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளார். அதன் பின்னர் மீண்டும் திருமண ஆசை வார்த்தை கூறி, தொடர்ந்து கருக்கலைப்பு செய்துள்ளார்.
இந்த நிலையில், மாணவி அளித்த புகாரின் பேரில் வினோத் கைது செய்யப்பட்டார். அவருக்கு, மகளிர் நீதிமன்றத்தில் உச்சபட்சமாக 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.