பெரியார் சிலைக்கு காவி சாயம் – கோவையில் பரபரப்பு

சுந்தராபுரம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டதால் பெரியார் ஆதரவாளர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் நாத்திக பெரியார் ஆதரவாளர்கள் அவமதித்தாக கூறி, இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று, பா.ஜ.க சார்பில், சென்னை உள்ளிட்ட ஒருசில இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில்,கோவை பொள்ளாச்சி செல்லும் சாலையில், சுந்தராபுரம் அருகே உள்ள பெரியாரின் முழு உருவச்சிலை மீது, சில மர்மநபர்கள் காவி சாயம் பூசி விட்டு சென்றுள்ளனர். இதனை அறிந்த பெரியார் ஆதரவாளர்கள், அந்த பகுதியில் குழுமினர். குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவல்துறையின் மற்ற அதிகாரிகள் காவலர்கள் அந்த பகுதிக்கு வந்து அவர்களிடம் சமாதானம் பேசியதுடன், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதையடுத்து, அப்பகுதியில் பெரியார் ஆதரவு கோஷங்களை எழுப்பிய தொண்டர்கள், உடனடியாக காவி சாயம் பூசிய மர்ம நபரை கைது செய்ய வேண்டும் எனவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
தமிழகத்தில் இனி இது போன்ற ஒரு அசம்பாவிதம் நடந்தாலும், அந்த பகுதியில் போராட்டம் வெடிக்கும் என்று பெரியார் தொண்டர்கள் எச்சரித்துள்ளனர்.