முதலீடுகள் பெறுவதில், தமிழகமே இந்தியாவில் நம்பர் ஒன்…!

ஊரடங்கு காலத்தில், 18 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை பெற்று, இந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலால், பெரு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை திரும்பப் பெற்று வெளியேறி வருகின்றன. இந்த முதலீடுகள் தமிழகம் உட்பட இந்தியாவில் பல மாநிலங்களுக்கு ஈர்க்கப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், இந்தியாவில் மொத்தம் 98 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு கிடைத்துள்ளது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த 3 மாதங்களில் 17 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.18 ஆயிரத்து 236 கோடி முதலீடுகளுக்கு அனுமதியளித்து முதலிடத்தில் உள்ளது. இது தேசிய அளவில் 18.63 சதவீதமாகும்.

அடுத்த இடத்தில் மகாராஷ்டிரா, ரூ.11 ஆயிரத்து 228 கோடியே 80 லட்சம் மதிப்பிலான முதலீடுகளை பெற்றுள்ளது. உத்தரபிரதேசம், ரூ.8 ஆயிரத்து 867 கோடியே 80 லட்சம் மதிப்பிலான முதலீடுகளை பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, இயந்திர உற்பத்திப் பிரிவில் காற்றாலை மின்உற்பத்திக்கான இயந்திர உற்பத்தியில் ரூ.2,000 கோடியை விவிட் சோலார் எனர்ஜி நிறுவனமும், செமிகண்டக்டர் சிப் தயாரிப்புக்காக ரூ.900 கோடியை பாலிமாடெக் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் முதலீடு செய்கின்றன. ஆட்டோமொபைல் பிரிவில், டெய்ம்லர் நிறுவனம் ரூ.2 ஆயிரத்து 277 கோடி மதிப்பில் வர்த்தக வாகனம் தயாரிப்பதற்கான முதலீட்டை மேற்கொள்கிறது.

அதேபோல், மின் உற்பத்திப் பிரிவில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ரூ.3,000 கோடி மதிப்பில் 750 மெகாவாட் திறனுடன் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் பிரிவை சென்னை பவர் ஜெனரேஷன் நிறுவுகிறது. இதுதவிர மேலும் சில பிரிவுகளிலும் தமிழகத்தில் முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x