“நான் தேவையின்றி அரசியலுக்கு வந்ததற்கு ஓபிஸ் தான் காரணம்” புலம்பும் தீபாம்மா!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் சார்பில், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கக் கோரியும், வேதா நிலையத்தில் உள்ள அசையும் சொத்துக்களை கையகப்படுத்தத் தடைவிதிக்கக் கோரியும் தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்கமறுத்த நீதிபதி, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எங்கு இருந்தீர்கள் எனக் கேள்வி எழுப்பி, வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்து உத்தரவிட்டார். இந்தநிலையில் இது குறித்து விளக்கமளித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர், “ஜெயலலிதா சொத்துக்களை அடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. நான் நடத்துவது சொத்துக்கான போராட்டம் இல்லை. நான் நடத்துவது உரிமைக்கான போராட்டம். உங்களுக்கு என்ன வேண்டும்? என எனது அத்தை ஜெயலலிதா பல முறை என்னிடம் கேட்டுள்ளார். ஆனால் நாங்கள் தான் அதை நிராகரித்து வந்துள்ளோம்.
ஜெயலலிதா விரும்பாததால் என்னால் போயஸ் இல்லத்திற்கு செல்ல முடியவில்லை என்பது இல்லை. சசிகலாவால் தான் போயஸ் இல்லத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை. ஜெயலலிதா இருந்தபோது எனக்கும், போயஸ் இல்லத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல் சித்தரித்தனர்.
ஓ.பி.எஸ் நடத்திய தர்ம யுத்தத்தால் தான் எல்லோருக்கும் தலைவலி ஏற்பட்டது. எல்லா பிரச்சினைக்கும் காரணம் இவர் தான். நான் இப்போது தெய்வத்தையும், ஜெயலலிதாவின் ஆன்மாவையும் தான் நம்பி உள்ளேன். ஆறுமுகசாமி ஆணையம் 6 முறை அழைத்தும் ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜராகாதது ஏன்? நான் தேவையின்றி அரசியலுக்கு வந்ததற்கு ஓபிஸ் தான் காரணம். ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது பற்றி அதிமுக தலைவர்களுக்கு கவலையே இல்லை” என கொந்தளித்துள்ளார்.