இஸ்ரேலில், பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள்!

பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தைச் சுற்றி, நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
90 லட்சம் மக்கள்தொகை கொண்ட இஸ்ரேலில், கிட்டத்தட்ட 50,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 400 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், வேலையில்லாத திண்டாட்டம் அதிகாரித்துள்ளதோடு, வணிக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரதம மந்திரி நெத்தன்யாகு ஏராளமான பொருளாதார உதவி திட்டங்களை அறிவித்திருந்தாலும், அவை மக்களைச் சென்று சேராத பயனற்ற திட்டங்கள் என்ற விமர்சனத்தை எழுப்பியுள்ளன. இதனால், அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தி பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், நெதன்யாகுவின் இல்லத்தைச் சுற்றி ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தெருக்களில் அணிவகுத்துச் சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இவர்களை கலைக்க இஸ்ரேலிய காவல்துறை நீர் பீரங்கியைப் பயன்படுத்தியது.
இதேபோல், இஸ்ரேலின் வணிக மையமான டெல் அவிவில், ஆயிரக்கணக்கானோர் பேரணிக்காக கூடினர். அப்போது, கொரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வணிகங்களுக்கும், வேலை இழந்தவர்களுக்கும் உதவ கோரி முழக்கங்களை எழுப்பினர்.
செவ்வாயன்று பாரபட்சமற்ற இஸ்ரேல் ஜனநாயக நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், நெதன்யாகு நெருக்கடியைக் கையாண்ட விதம் குறித்து, 70 சதவீதம் பேர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.