சிறுத்தை கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை.. கடலூரில் பழிக்கு பழி!

கடலூர் மாவட்டத்தில் அதிமுக – விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே இருந்த தேர்தல் முன் பகை காரணமாக விசிகவின் ஊராட்சி மன்றத் தலைவர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த கீழ் அருங்குணத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் ( வயது 30) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலர். அதே பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 45) அ.தி.மு.க., பிரமுகர். அருங்குணம் ஊராட்சி தலைவர் பதவிக்கு இவர்கள் போட்டி போட்டனர். இதனால் இருவருக்கும் இடையே புகைச்சல் இருந்தது. கடந்த முறை நடந்த தேர்தலில், சுபாஷ் வெற்றி பெற்று, ஊராட்சி தலைவர் ஆனார்.
இதனையடுத்து ஜனவரி மாதம், சுபாஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அ.தி.மு.க., பிரமுகர் தாமோதரன் வீட்டுக்கு சென்றனர். அங்கு தாமதோரன் இல்லாததால் அவரது ஆதரவாளர் தங்கவேலு, (37) என்பவரை வெட்டி கொன்றனர். இவ்வழக்கில் சுபாஷ் உட்பட, 15 பேரை கைது செய்தனர். சுபாஷ், ஜாமினில் வந்தார். நேற்று மாலை, 6:௦௦ மணியளவில், ஊராட்சி தலைவர் சுபாஷ், தன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.
இதையறிந்த தாமோதரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுபாஷை மடக்கி சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். இதில் சம்பவ இடத்திலேயே சுபாஷ் உயிரிழந்தார். இக்கொலை தொடர்பாக தப்பியோடி தாமோதரனையும், அவரது கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.