அரசு அலுவலகத்தில் கழிப்பறை இல்லை – மாற்றுத்திறனாளி பெண் உயிரிழப்பு!!

காஞ்சிபுரம் அருகே உள்ள கிராமத்தில் அரசு வேளாண் விரிவாக்க மையம் உள்ளது. வசதி இல்லாததால் அருகில் இருந்த வீட்டிற்கு இயற்கை உபாதைகளை கழிக்க சென்ற பெண் செப்டிக் டேங்கில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
காஞ்சிபுரம் அடுத்துள்ளது களக்காட்டூர் கிராமம். இங்கு சரண்யா என்ற மாற்றுத்திறனாளி இளம்பெண் கிடங்கு மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் கழிப்பறை வசதி இல்லை. இதனை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.
அப்பெண் அருகில் இருந்த வீட்டின் கழிப்பறையைப் பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்திருந்தார். தற்பொழுது மழை பெய்து அப்பகுதியில் கணுக்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்று உள்ளது. செப்டிக் டேங்கில் மீது கால் வைத்து உள்ளார்.
அந்த செப்டிக்டேங்க் ஆர்.சி.சி., பலகை கொண்டு மூடாமல் வெறுமனே ஷீட் ஒன்று போட்டு வைத்து இருந்திருக்கின்றனர். மழையில் ஊரிய நிலையில் இருந்துள்ளது. இவர் தவறுதலாக அதில் கால் வைத்தவுடன் ஸ்லாப் உடைந்து செப்டிக் டேங்க் உள்ளே சரண்யா விழுந்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் சரண்யா வராததால் உடன் வேலை பார்த்தவர்கள் அருகில் உள்ள வீட்டுக்கு சென்றனர். அப்போது சரண்யா செப்டிக் டேங்கினுள் தத்தளித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.
உடனடியாக அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சரண்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.
அரசு அலுவலகங்களில் அடிப்படை வசதி இல்லாத காரணத்தினால் வாழ வேண்டிய ஒரு பெண் அதுவும் மாற்றுத்திறனாளி பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காஞ்சிபுரம் மக்களை கோபம் அடையச் செய்துள்ளது.