10 கோடி தடுப்பூசிகளை ஆர்டர் செய்த இங்கிலாந்து!

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி கொரோனா வைரஸை அழிக்கும் முயற்சி வெற்றி வாய்ப்பை எட்டியுள்ளது

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்றும், நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி வைரஸுக்கு எதிராக பாதுகாப்பு அளிப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தடுப்பு மருந்து சோதனைகள் 1,077 நோயாளிகளின் மீது நடத்தப்பட்டது. ஊசி மூலம் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டவர்களின் இரத்தத்தில், மருந்து கொடுக்கப்படாதவர்களை விட வைரஸை எதிர்த்து போராடும் திறன் கொண்ட ஆன்டிபாடிகள் மற்றும் குறிப்பிட்ட கொரோனா வைரஸுக்கு மட்டுமே எதிரான தனித்துவ T-செல்களும் அதிக அளவில் உருவாகியிருந்தது.

எனவே இந்த தடுப்பு மருந்து மிகவும் திறன்வாய்ந்ததாகவும், நம்பிக்கைக்கு உரியதாகவும், குறிப்பாக மிகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. இதன் பாதுகாப்புத் திறனை மேலும் உறுதிப்படுத்தும் சோதனைகள் நடந்து வருகின்றன. அதற்கு முன்னரே இங்கிலாந்து சுமார் 100 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகள் வேண்டி ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நோயாளிகளுக்கு தடுப்பு மருந்து கொடுத்து 14 நாட்களுக்குப் பிறகு இரத்தத்தில் T-செல்களின் எண்ணிக்கை அதிக அளவு உயர்ந்தது கண்டறியப்பட்டது. மேலும், வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடி அளவு 28 நாட்களுக்குப் பிறகு உயர்ந்தது.

ஆக்ஸ்போர்டு ஆய்வுக் குழுவின் பேராசிரியர் ஆண்ட்ரூ பொல்லார்ட் கூறும்போது, “வைரஸை செயலிழக்கச் செய்யும் திறனுள்ள ஆன்டிபாடிகள் மற்றும் டி-செல்கள் இரண்டின் அளவும் அதிகரித்துள்ளதை நாங்கள் காண்கிறோம் என்பதால் இன்று வெளியிடப்பட்ட முடிவுகளில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.” மேலும் கூறுகையில், “இதன்படி எங்களது தடுப்பு மருந்து மிகவும் பாதுகாப்பானவை மற்றும் செயல்திறன்மிக்கவை,” என்றும் கூறினார்.

இந்த ஆய்வில், எல்லோரும் தெரிந்து கொள்ள விரும்பும் முக்கிய கேள்வி என்னவென்றால், தடுப்பு மருந்தின் பாதுகாப்புத் தன்மை மற்றும் அதன் செயல்திறன் ஆகும். நாங்களும் அதை கண்டறியவே காத்துக் கொண்டிருக்கிறோம்,” என்றார்.

இந்த ஆய்வில் பங்கேற்ற மொத்த நோயாளிகளில் 90% பேர் முதல் டோஸ் தடுப்பு மருந்திலேயே வைரஸை செயலிழக்கச் செய்யும் ஆன்டிபாடிகளை உருவாக்கியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் வெறும் பத்து பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ்கள் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் (100%) வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகளை பெற்றிருந்தனர்.

“முழுமையான பாதுக்காப்பை உருவாக்க எவ்வளவு டோஸ் தடுப்பு மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் இரண்டாவது டோஸ் மூலம் தனித்துவமான செயல்திறனை அதிகரிக்க முடியும்” என்று பேராசிரியர் பொல்லார்ட் கூறினார்.

இதன் பாதுகாப்பு பற்றி அவர் கூறும்பொழுது, ஆம் பாதுகாப்பானதுதான் . ஆனால் மிக சிறிய அளவிலான பக்க விளைவுகள் உண்டாயின. விளக்கமாகக் கூறுவதானால், தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டதால் கடுமையான பக்க விளைவுகள் எதுவும் உண்டாகவில்லை. இருப்பினும், சோதனையின்போது, 70% பேர் காய்ச்சல் அல்லது தலைவலியைப் பெற்றனர். அதை சரி செய்ய பாராசிட்டமால் பயன்படுத்தப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சாரா கில்பர்ட் கூறும்போது, “கோவிட் -19 தொற்றுநோயை கட்டுப்படுத்த எங்கள் தடுப்பு மருந்து உதவுமா என்பதை உறுதிப்படுத்துவதற்கு இன்னும் நிறைய ஆய்வுகள் செய்யப்பட உள்ளன, ஆனால் இந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட முடிவுகள் நம்பத்தகுந்ததாக உள்ளன,” என்றார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் செயல்திறன் முழுமையாக இந்த ஆண்டு இறுதிக்குள் நிரூபிக்கப்படும் சாத்தியம் உள்ளது. இருப்பினும், இது பரவலாக கிடைக்க வாய்ப்பு இல்லை. கோவிட் -19 தொற்றினால் அதிக அபாயத்தில் இருப்பதாகக் கருதப்படும் நபர்கள், வயது அல்லது மருத்துவ நிலைமைகள் காரணமாக சுகாதார மற்றும் பராமரிப்புத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதைப்பற்றி போரிஸ் ஜான்சன் கூறும்போது, “வெளிப்படையாக கூறுவதானால், நான் 100% நம்பிக்கையுடன் இருக்கிறேன், இது மிகைப்படுத்துதல் என்றாலும், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் ஒரு தடுப்பு மருந்தைப் பெறுவோம்.” என்றார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x