ம.பி., ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார் – மோடி இரங்கல்

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல் நலக்குறைவால் செவ்வாயன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மத்தியப்பிரதேச ஆளுநரான லால்ஜி டாண்டன் (85) மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக கோளாறால் கடந்த ஜூன் மாதம் முதல் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் ம.பி., ஆளுநர் பொறுப்பை கூடுதலாக உ.பி., கவர்னராக இருக்கும் ஆனந்திபென் பட்டேல் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல் நலக்குறைவால் காலமானார். லால்ஜி டாண்டன் மறைந்த செய்தியை அவரது மகன் அசுதோஷ் தாண்டன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். லால்ஜி டாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரவித்துள்ளார்.
லால்ஜி டாண்டன் சமூகத்திற்கு சேவை செய்வதற்காக எடுத்த முயற்சிகள் நினைவில் கொள்ளப்படும். லால்ஜி டாண்டன் ஒரு திறமையான நிர்வாகி, பொது நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். உத்தர பிரதேச பாஜக-வின் வளர்ச்சியில் லால்ஜி டாண்டனின் பங்கு அளப்பரியது. இவ்வாறு தனது இரங்கல் குறிப்பில் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆகியோரும் லால்ஜி டாண்டன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.