கொடைக்கானலில் பலத்த மழை: அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கொடைக்கானலில் பெய்த மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டியது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3–மாதங்கள் பருவமழை காலமாகும். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக ஒரு சில நாள்கள் மட்டுமே மழை பெய்தது. இதனால் கொடைக்கானல் நகர்ப் பகுதிகளில் 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
இதனால் பொது மக்கள் அவதிக்குள்ளாயினர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்தது. இந்நிலையில் அதிகாலை முதலே மேகமூட்டம் நிலவி வந்த வேளையில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழையானது கொடைக்கானல் பகுதிகளான அப்சர்வேட்டரி, நாயுடுபுரம், செண்பகனூர், பெருமாள்மலை, அட்டக்கடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சி பியர் சோழா அருவி, வட்டக்கானல் அருவி செண்பகா அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டியது.