திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவர் நாட்ராயன் (56). இவர் சொந்தமாக விசைத்தறி வைத்து போர்வை உற்பத்தி செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது செல்போனுக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய பெண் ஒருவர், தனது பெயர் வெண்ணிலா என்றும், தங்களுக்கு போர்வை அதிகளவில் தேவைப்படுவதால் ஆர்டர் அளிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரை ஆண்டிபாளையம் என்ற இடத்திற்கு வந்து ஆர்டர் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து தனது உறவினர் ஒருவரோடு, அந்தப்பெண் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றுள்ளார் நாட்ராயன். அங்கு ஏற்கெனவே பதுங்கி இருந்த கும்பல் நாட்ராயன் மற்றும் அவரது உறவினரை மடக்கிப் பிடித்து அவர்களின் ஆடைகளை களைந்துள்ளனர். மேலும் அந்தக் கும்பலில் இருந்த பெண்ணோடு நிற்கவைத்து புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.
இதனை வைத்து மிரட்டிய அந்த கும்பல் ரூ. 3 லட்சம் பணம் வேண்டுமென கேட்டுள்ளனர். மேலும் நாட்ராயன் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகை, அவருடைய செல்போன், கையில் இருந்த ரூ.3ஆயிரம் பணத்தையும் பறித்துக்கொண்டு அனுப்பியுள்ளனர்.
மறுபடியும் நாட்ராயன் செல்போனுக்கு அழைத்த மோசடி கும்பல் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து நாட்ராயன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து செல்போன் எண்ணைக் கொண்டு விசாரணை நடத்திய போலீசார் அவிநாசியை சேர்ந்த கவிதா (எ) வெண்ணிலா (27), தூத்துக்குடியை சேர்ந்த இசக்கிபாண்டி (30), திருநெல்வேலியை சேர்ந்த இசக்கிமுத்து (27), ஜெபராஜ் (24), சின்னதுரை (29) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, பணம், கார், அரிவாள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இதே கும்பல் வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
