ஆளுநர் மாளிகை முன் குவிந்த ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், இன்று தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநரை சந்தித்து சட்டசபையை கூட்டுவதற்கு அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின், துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க கொறடா உத்தரவிட்டார். அது குறித்து சபாநாயகர் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில் தங்களுக்கு எதிராக சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது என உயர் நீதிமன்றத்தை நாடினர். சச்சின் பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் அசோக் கெலாட் ஆட்சிக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தை கூட்டினால் மட்டுமே அதிருப்தி எம்.எல்.ஏக்களை ராஜஸ்தான் வரவழைக்க முடியும்.
ஆனால் கவர்னர் சட்டமன்றத்தை கூட்ட ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் இன்று அதிரடியாக தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 90 பேருடன் கவர்னர் மாளிகை சென்றார் முதல்வர் அசோக் கெலாட். பின்னர் கவர்னரை சந்தித்து சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிடுமாறு வலியுறுத்தினார். வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இல்லையென்றாலும் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றார்.