மூன்று மாதத்திற்கு பின் குறைந்தது கொரோனா – மும்பை மக்கள் நிம்மதி!

மும்பையில் கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு தற்போது முதல் முறையாக கொரோனா பாதிப்பு மிகக் குறைந்த எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. அதே போல் நகரங்களில் முதலிடத்தில் மும்பையும் இரண்டாம் இடத்திலும் சென்னையும் உள்ளன.
மும்பையில் கடந்த நூறு நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரையில் இல்லாத அளவு அதிகபட்சமாக 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில் 700 பேருக்கு மட்டுமே தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது கடந்த 3 மாதங்களுக்கு பிறகு பதிவாகும் குறைவான எண்ணிக்கை ஆகும்.
அதே போல் மும்பையில் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக தற்போது 68 நாட்கள் ஆகிறது. மேலும் குணமடைபவர்களின் விகிதம் 73 சதவீதமாக உள்ளது. இந்த செய்தியால் நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் மனதில் நிம்மதியும், நம்பிக்கையும் தோன்றியுள்ளது.