ஸ்டெர்லைட் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்ட வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, பொதுமக்கள் தன்னெழுச்சி போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி, வேதாந்தா நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்குகளை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணை, 39 நாட்கள் நடைபெற்றது.

இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்க கோரியும், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.