சென்னை நுங்கம்பாக்கத்தில் வீட்டில் சூதாட்டம் நடத்திய நடிகர் ஷாம் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
‘12 பி’ இயற்கை, பொறம்போக்கு என்கிற பொதுவுடமை, உள்ளம் கேட்குமே, 6 மெழுகுவர்த்திகள் ஆகிய பல நல்ல படங்களில் நடித்தவர் ஷாம். தெலுங்கு சினிமாவிலுன் ஒரு சில முன்னணி நடிகர்களின் படத்தில் 2வது நாயகனாகவும் நடித்தவர்.
நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரிக்கு எதிரே உள்ள குடியிருப்பில் நடிகர்–நடிகைகள் மற்றும் பலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு ரகசிய தகவல்கள் வந்தன. அதன்பேரில் நேற்று இரவு இணைக்கமிஷனர் மேற்பார்வையில், திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் தர்மராஜன் தனிப்படை போலீசார் அங்கு நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் அந்த வீடு நடிகர் ஷாம் வீடு என்பது தெரியவந்தது. அங்கிருந்த நடிகர் ஷாம் மற்றும் அவருடைய வேலைக்காரர்கள் 3 பேர் உட்பட முக்கிய புள்ளிகள், தொழிலதிபர்கள் என 13 பேரை நுங்கம்பாக்கம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சூதாட்டம் பல மாதங்களாக நடைபெற்று வருவது தெரியவந்தது. மேலும் நடிகர் ஷாம் இன்னொருவருடன் சேர்ந்து இதனை நடத்தி வந்ததும், நிதிநிறுவன மோசடியில் ஈடுபட்ட கோபிகிருஷ்ணன் என்பவரும் இதில் முக்கியப்பங்கு வகித்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.
நேற்று இரவே நடிகர் ஷாம் உள்பட 13 பேரையும் போலீசார், நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
