மத்தியப் பிரதேச பிஜேபி-யினரை சுற்றிவளைக்கும் கொரோனா

மத்தியப் பிரதேச மாநில பிஜேபி தலைமையை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. முதல்வர் துவங்கி மாநில பாஜக தலைவர் வரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான், மாநில பாஜக தலைவர் மற்றும் கஜுராஹோ மக்களவை உறுப்பினர் வி.டி. ஷர்மா, கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சுஹாஸ் பகத் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல்வர் சௌகானுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிரயு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுஹாஸ் பகத்துக்கு செவ்வாய்கிழமை கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.
சமீபத்தில் வி.டி. ஷர்மாவுக்கும் கொரோனா உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் அரவிந்த் படோரியாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர் மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் இறுதிச் சடங்கில் பங்கேற்றார். அதே இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் உள்பட நான்கு தலைவர்களுக்குமே தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர்த்து மத்தியப் பிரதேச நீர்வளத் துறை அமைச்சர் துளசி சிலாவத், சிறுபான்மைத் துறை இணை அமைச்சர் ராம் கெலாவன் பட்டேல் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.